ஏற்காட்டில் பலத்த மழை: மரம் விழுந்து கண்ணாடி மாளிகை சேதம்

ஏற்காட்டில் பலத்த மழை காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்ததால் கண்ணாடி மாளிகை சேதம் அடைந்தது.
ஏற்காட்டில் பலத்த மழை: மரம் விழுந்து கண்ணாடி மாளிகை சேதம்
Published on

ஏற்காடு,

சுற்றுலா தலமாக ஏற்காடு விளங்கி வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களாக கடும் வெயில் தாக்கியது. ஆனாலும் கோடை விடுமுறை காலமாக இருந்ததால் கடந்த சில வாரங்களாக சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து சென்றனர்.

இந்தநிலையில் ஏற்காட்டில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இரவு 10 மணி வரை பலத்த மழை தொடர்ந்து பெய்தது.

அப்போது ஒண்டிக்கடை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளை முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இவ்வாறு ஏற்காடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஏற்காடு அண்ணா பூங்கா அருகில் கண்ணாடி மாளிகை உள்ளது. இந்த கண்ணாடி மாளிகையில் கோடை விழா நாட்களில் காய்கறிகளால் உருவங்கள் செய்து வைக்கப்பட்டு இருக்கும். நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது மரம் முறிந்து கண்ணாடி மாளிகை மீது விழுந்தது. இதில் அந்த மாளிகையில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் வயர்களை சீரமைத்தனர். இதையடுத்து மின்சாரம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com