

குடகு,
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2018) மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. இந்த பருவமழை கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. குறிப்பாக சுற்றுலா பயணிகளால் குட்டி சுவிட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் குடகு மாவட்டத்தை ஒரு புரட்டு புரட்டியது.
அந்த மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து வீடுகள் மீது விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் வீடுகள், உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர். இந்த கனமழைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளும் கட்டு முடிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கர்நாடகத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் தான் தொடங்கியது. ஆனால் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. வடகர்நாடக மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் தான் பெய்து வந்தன. தென்கர்நாடகத்தை பொறுத்தவரையில் குடகில் மட்டும் தான் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை.
இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. இதனால் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்இணைப்பு இல்லாததால் பல கிராமங்கள் இருளில் தத்தளித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கேரள எல்லையில் உள்ள குடகு மாவட்டத்தில் அதிக தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அனைவரும் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் ஆரஞ்ச் அலார்ட்(இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமானதாக மாறலாம் என்பதை குறிக்கும்) விடுவிக்கப்பட்டு இருந்தது.
கனமழை எதிரொலியாக உடுப்பி மாவட்டத்தில் இன்று(அதாவது நேற்று) முதல் 23-ந் தேதி வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். உடுப்பிக்கு சுற்றுலா வரும் பயணிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடலில் யாரும் குளிக்க செல்ல கூடாது. மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.