கனமழையால் குடகில் மீண்டும் நிலச்சரிவு; மக்கள் பீதி மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 3 வாகனங்கள் சேதம்

குடகில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.
கனமழையால் குடகில் மீண்டும் நிலச்சரிவு; மக்கள் பீதி மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 3 வாகனங்கள் சேதம்
Published on

குடகு,

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குடகில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த தொடர் கனமழையால் மாவட்டத்தில் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

குடகில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்தனர். இந்த மழை குடகு மாவட்டத்தையே புரட்டி போட்டது என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு பெய்த மழையால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் நடந்து வருகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் நடப்பாண்டில் கடந்த மாதம் (ஜூன்) 2-வது வாரத்தில் இருந்து தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் குடகு, மங்களூரு, உடுப்பி, கார்வார், சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் தான் ஓரளவு மழை பெய்து வந்தது. பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குடகு, கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது.

இதற்கிடையே குடகு மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 20-ந்தேதி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை மிக அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குடகு மற்றும் உடுப்பி மாவட்டங்களில் கடந்த 20-ந்தேதியில் இருந்து நாளை வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய தொடர்ந்து கனமழை கொட்டியது. இந்த தொடர் கனமழை காரணமாக மடிகேரியில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் வழியில் உள்ள ஜோடுபாலா பகுதியில் நேற்று காலை திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலச்சரிவால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் மடிகேரி, விராஜ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. கடந்த ஆண்டை போல தற்போதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். குடகில் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குடகில் சூறைக்காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில், மைசூரு-விராஜ்பேட்டை சாலையில் தித்திமத்தி பகுதியில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் கார், ஜீப், சரக்கு ஆட்டோ ஆகியவை சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

மரங்கள் சாய்ந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதன்காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா பகுதிகளில் தான் அதிக மழை பெய்து வருகிறது. பாகமண்டலா சங்கமம் பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com