மீன்சுருட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை: புதிதாக கட்டப்பட்ட ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்

மீன்சுருட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, புதிய ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீன்சுருட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை: புதிதாக கட்டப்பட்ட ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்
Published on

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் காலனி தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 40). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பாபு அந்த பகுதியில் புதிதாக ஒரு ஓட்டு வீடு கட்டி வந்தார். இதில் 6 இடங்களில் சிமெண்டு தூண்கள் நடப்பட்டு, மேலே பட்டியல் அமைக்கப்பட்டு ஓடுகள் வேயப்பட்டிருந்தன. மேலும் தூண்களையொட்டி சுவர்கள் அமைக்கும் பணி நடைபெற இருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று மதியம் அப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்த பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டிருந்த சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமியின் மனைவி ராஜம்(வயது 60), அன்பழகன்(62), ராதாகிருஷ்ணன்(35) மற்றும் செங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(25) ஆகியோர் மழைக்காக பாபுவின் புதிய ஓட்டு வீட்டில் ஒதுங்கி இருந்தனர்.

அப்போது சூறாவளி காற்றில் திடீரென அந்த வீடு சரிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் மழைக்காக ஒதுங்கி நின்ற ராஜம், அன்பழகன், ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். மேலும் அந்த வீட்டில் கட்டப்பட்டு இருந்த பசுமாட்டிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ராஜம் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், அன்பழகன் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் கங்கவடங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த வடமலையின் மகன் ராஜாவின்(30) கூரை வீடும் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் இடிந்து தரைமட்டமானது. இது பற்றி தகவலறிந்த முத்துசேர்வாமடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், கிராம உதவியாளர் அஞ்சம்மாள் ஆகியோர் உடனடியாக நேரில் சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com