

திருவண்ணாமலை
திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க சாலையோரம் உள்ள இளநீர், தர்பூசணி, ஜூஸ் போன்றவற்றை பருகி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியது. வாகனங்களில் சென்றவர்கள் மட்டுமின்றி நடந்து சென்றவர்களும் இதனால் அவதிப்பட்டனர். மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் 7 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
இதேபோல் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் நேற்று இரவு 7.20 மணி முதல் 7.40மணி வரை மழை பெய்தது. அதன் பின்னர் பலத்த இடியுடன் காற்றுடன் கூடிய மழை 45நிமிடங்கள் வரை நீடித்தது.
செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.