விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது

மாவட்டத்தில் விடிய விடிய பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ததது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்ததுடன் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது
Published on

ராமநாதபுரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை இருக்கும் என்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசத்தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் கண்ணை பறிக்கும் வெளிச்சத்துடன் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

இடைவிடாது விடியவிடிய பெய்த இந்த அடை மழை நேற்று காலையிலும் தொடர்ந்தது. இந்த கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதேபோன்ற பலத்த மழை பெய்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் மற்ற பகுதியை காட்டிலும் குறைந்த அளவே பெய்தது.இதன்காரணமாக நேற்று அடை மழை பெய்தபோதிலும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வற்றி விட்டது. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது. ராமநாதபுரம் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைவெள்ளம் சூழ்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குறுகலான தெருக்கள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் எங்கு பார்த்தாலும் மழைவெள்ளமாக காட்சி அளித்தது.

ராமநாதபுரம் நகர் வண்டிக்காரத்தெரு பகுதியில் மழைகாரணமாக பெருக்கெடுத்த மழை நீர் அந்த பகுதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்தது. இதன்காரணமாக கடைகளில் இருந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் உள்ளிட்டவை மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. கடை உரிமையாளர்கள் மோட்டார் மூலம் கடைக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றினர். இதேபோல, ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் பகுதி முழுவதும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இரவு முழுவதும் பெய்த இந்த மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் சேரத்தொடங்கி உள்ளன.

கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்த நிலையில் நேற்று பெய்த இந்த மழையால் பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதுதவிர நிலத்தடி நீரின் சுவை மாறி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தொடர்ந்து பெய்து வருவதால் இந்த ஆண்டு நன்றாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழைகாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக நெல் விவசாயத்திற்கு இந்த மழை பெரும் உதவியாக இருக்கும் என்பதால் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- ராமநாதபுரம்-47, மண்டபம்-7, பள்ளமோர்குளம்-42, ராமேசுவரம்-7.4, தங்கச்சிமடம்-9.6, பாம்பன்-11.9, ஆர்.எஸ்.மங்கலம்-17, திருவாடானை-8, தொண்டி-11.2, வட்டாணம்-13, தீர்த்தாண்டதானம்-8, பரமக்குடி-64.8, முதுகுளத்தூர்-16, கடலாடி-18, வாலிநோக்கம்-35.2, கமுதி-40.2. சராசரி-22.27.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com