பலத்த மழை: குன்னூரில் 3 வீடுகள் இடிந்தன - 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

குன்னூரில் பெய்த பலத்த மழைக்கு 3 வீடுகள் இடிந்தன. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பலத்த மழை: குன்னூரில் 3 வீடுகள் இடிந்தன - 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளன. அத்துடன் சாலையோரத்தில் நிற்கும் மரங்கள் அடிக்கடி சரிந்து விழுந்து வருகிறது. அவற்றை நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் கண்காணித்து அகற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மழை தொடங்கியது. தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழை, நேற்று காலை 6 மணி வரை நீடித்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த மழை காரணமாக குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் தண்ணீர் ஓடியது. இதில் அங்கு வசித்து வரும் கூலி தொழிலாளியான புஷ்பராஜ் (வயது 63) வீட்டின் சமையலறை இடிந்து விழுந்தது. புஷ்பராஜூம், அவருடைய மனைவியும் மற்றொரு அறையில் இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

மேலும் அவர் வீட்டின் சுவர் இடிந்து அருகில் உள்ள பெருமாள் (74) வீட்டின் மீது விழுந்தது. இதில் அவருடைய வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.

வீட்டில் இருந்த பெருமாள், அவருடைய மனைவி பத்மா காயமின்றி உயிர் தப்பினர். அதுபோன்று பலத்த மழைக்கு குன்னூர் அருகே உள்ள உபதலை அம்பிகாபுரத்தை சேர்ந்த கனகமணி என்ற மூதாட்டி வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.

தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருவதால் வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்பட பல்வேறு து றையை சேர்ந்த ஊழியர்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். அத்துடன் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-15.6, குந்தா-43, அவலாஞ்சி-15, எமரால்டு -32, கெத்தை-26, கிண்ணக்கொரை-22, பாலகொலா-62, குன்னூர்-44, பர்லியார்-32, கேத்தி-37, உலிக்கல்-44, எடப்பள்ளி-34, கோத்தகிரி-23, கீழ் கோத்தகிரி-46 என மொத்தம் 507.2 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 17.49 ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com