நாகை மாவட்டத்தில் தொடர் கன மழை: அறுவடைக்கு தயாரான 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின

நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் நிவாரணம் வழங்கக்கோரி வாயிலும், வயிற்றிலும் அடித்து கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் மழையில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்களை கைகளில் எடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது
நாகையில் மழையில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்களை கைகளில் எடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது
Published on

நெற்பயிர்கள் அழுகின

நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு நெற்பயிர்கள் தயார் நிலையில் இருந்து வந்தது.இந்த நிலையில் தொடர் மழையால் நாகை மாவட்டத்தில் 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகி வருகின்றன.

சங்கமங்கலம், பாலையூர், பழையனூர், புலியூர், தேமங்கலம், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 67 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயலில் சாய்ந்து கிடக்கின்றன. மேலும் சாய்ந்த பயிர்கள் முளைத்து விட்டன.

வயலில் நின்று போராட்டம்

பாலையூர் கிராமத்தில் மழையில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்களை விவசாயிகள் கையில் எடுத்து வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைமடைப் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து, அரசு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம் தாலுகாவில் கரியாப்பட்டினம், வடமழைமணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 எக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தொடர் கன மழையால் வயல்களில் 2 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியது. வயலும், வரப்பும் ஒன்றாக நீரில் மூழ்கி உள்ளன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகி விட்டது. தற்போது சாய்ந்த அனைத்து நெற்பயிர்களும் முளைக்க தொடங்கிவிட்டன.

விவசாயிகள் கண்ணீர்

ம்பா சாகுபடிக்கு வங்கி மற்றும் தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்த நிலையில் தற்போது மழையினால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தண்ணீரில் தத்தளிக்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல்

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 12 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன.மேலும் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகியும் உள்ளது.

திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன.

சுவர் இடிந்து விழுந்து

மழையால் திருமருகல் அருகே ஏனங்குடி ஊராட்சி கயத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகையன் மகன் குமார் என்பவரின் கூரை வீட்டின் முன்பக்க சுவர் இடிந்துவிழுந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com