நாகை மாவட்டத்தில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன வீடுகளில் மழைநீர் புகுந்தது

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் வீடுகளில் மழைநீர் புகுந்தது.
நாகை மாவட்டத்தில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன வீடுகளில் மழைநீர் புகுந்தது
Published on

நாகப்பட்டினம்,

நாகையில் சில நாட்களாக பனி பொழிவு கடுமையாக இருந்தது. இந்தநிலையில் நாகையில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த மழையால் நாகை நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகை மேலகோட்டைவாசல்படி பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனேயே அந்த பகுதியை கடந்து சென்றனர். நாகூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தேங்கிய தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்த நிலை நீடித்தால் நெற் பயிர்கள் அழுகும் நிலை உருவாகும் என்று நாகை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன

இதேபோல் கீழ்வேளூர், அத்திப்புலியூர், குருக்கத்தி, கீவளூர், தேவூர், வலிவலம், விடங்கலூர், கோகூர், ஆனைமங்கலம், கடம்பங்குடி,வெங்கிடங்கால், திருகண்ணங்குடி, ஆழியூர், சிக்கல், ஓரத்தூர், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கீழ்வேளூர் பட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் நாகூர், திருமருகல், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகையில் 138.60 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக மணல்மேட்டில் 32 மி.மீட்டரும் மழை பதிவானது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com