

புதுச்சேரி,
நிவர் மற்றும் புரெவி புயலால் பெய்த பலத்த மழையால் புதுவையில் ஊசுடு, பாகூர் உள்ளிட்ட ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. படுகை அணைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள காலிமனைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறின.
இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவதற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை கொட்டி தீர்த்தது.
இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் மீண்டும் தண்ணீர் புகுந்தது. நகரின் முக்கிய வீதிகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, நேரு வீதி மற்றும் பூமியான்பேட், பாவாணர் நகர், நடேசன் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் தேங்கியது. இதனால் சாலைகள், சந்திப்புகள் அனைத்தும் குளம் போல் காட்சியளித்தன.
நேற்று முன்தினம் பகலில் தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வேறுவழியின்றி பாத்திரங்கள், பிளாஸ்டிக் வாளிகள் மூலம் தண்ணீரை வாரி இறைத்து தூக்கத்தை தொலைத்தனர். நேற்று காலையில் இருந்தும் மழை தொடர்ந்து பெய்தது.
தேங்கி கிடந்த தண்ணீர் பல இடங்களில் மோட்டார் மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்ததால் மீண்டும் தண்ணீர் வடியாமல் இருந்தது. இதன் காரணமாக ரோடுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய வடிகால் வாய்க்கால்களான உப்பனாறு, பெரிய வாய்க்கால், சின்னவாய்க்கால் போன்றவற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காலையில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே புயலின்போது பெய்த பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் பல்லாங்குழிகளாக மாறி இருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் மீண்டும் சேதத்துக்குள்ளாகின. கடலூர் சாலை, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிகள் பெயர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. நகரப் பகுதி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
மழை காரணமாக வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தொடர்மழையினால் வீடுகளிலேயே முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுவையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணி வரை 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.