திருப்பூரில் கொட்டி தீர்த்த மழை: மின்னல் தாக்கியதில் பனியன் நிறுவனம் தீப்பிடித்தது

திருப்பூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்னல் தாக்கியதில் பனியன் நிறுவனம் தீப்பிடித்து எரிந்தது.
திருப்பூரில் கொட்டி தீர்த்த மழை: மின்னல் தாக்கியதில் பனியன் நிறுவனம் தீப்பிடித்தது
Published on

திருப்பூர்,

திருப்பூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. அதன் பிறகு பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. விடிய, விடிய மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் பல பகுதிகள் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் சாலையோரம் நின்ற பெரிய மரம் சரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளியில் இருந்து நஞ்சப்பா பள்ளிக்கு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக அந்த வழி அடைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மிலிட்டரி காலனி பகுதியிலிருந்து வாகனங்கள் ராயபுரம் பகுதிக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தேங்கிய மழைநீர்

மாநகராட்சி அதிகாரிகள் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். நேற்று மதியம் வரை இந்த பணிகள் நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலமாக மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் மழைநீர் அதிக அளவு தேங்கியது. நேற்றுகாலை மாநகராட்சியில் இருந்து லாரி மூலம் அந்த மழை நீரை உறிஞ்சி எடுத்து அகற்றப்பட்டது.

தீ விபத்து

முன்னதாக நள்ளிரவு 1 மணி அளவில் திருப்பூர் 60 அடி ரோடு ஏ.ஜி. நகரில் திலீப் குமார் என்பவரின் பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது.அருகில் உள்ளவர்கள் இதை கவனித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த தையல் எந்திரங்கள், ஆடைகள், மின்விசிறி, பீரோ உள்பட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மின்னல் தாக்கியதில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை 7 மணி வரை பதிவான மழையளவுப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 45 மில்லி மீட்டரும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 39 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 14 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 3 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 12 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை பகுதியில் 10 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை பயணியர் விடுதி பகுதியில் 27.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com