திருச்சி நகரை சூழ்ந்த கடும் பனிமூட்டம் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி

திருச்சி நகரில் நேற்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருச்சி நகரை சூழ்ந்த கடும் பனிமூட்டம் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
Published on

திருச்சி,

திருச்சியில் கடந்த வாரம் வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதில் கடந்த திங்கட்கிழமை மழை இல்லை என்றாலும் வெயிலின் தாக்கமும் இல்லை. இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு மிக கடுமையாக இருந்தது.

பொதுவாக மழைக்காலங்களில் காலை 6.30 மணிக்கு பிறகுதான் சூரிய உதயத்தை காணமுடியும். ஆனால் திருச்சியில் நேற்று காலை சுமார் 8 மணி வரை சூரியனை காண முடியவில்லை. 10 அடி தூரத்திற்குள் நிற்கும் நபரையோ எந்த ஒரு பொருளையும் காண முடியாத நிலை ஏற்பட்டது.

பனி மூட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ராஜகோபுரம், திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை ஆகியவை பனிப்போர்வையால் மூடப்பட்டது போல் பனி சூழ்ந்து காட்சி அளித்தது. வீடுகளின் தாழ்வாரங்களில் மழைநீர் போல் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. இந்த பனிமூட்டத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் டிரைவர்கள் கடும் அவதி அடைந்தனர். மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். மஞ்சள் நிற முகப்பு விளக்கு இல்லாத வாகன ஓட்டுனர்கள் தாங்கள் ஓட்டி வந்த வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி ஓய்வு எடுத்தனர். அந்த அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. காலை 8 மணிக்கு மேல் தான் சூரிய ஒளி பரவ தொடங்கியது. அதன் பின்னரே பனிமூட்டம் மறைந்து இயல்பான நிலைக்கு திருச்சி நகரம் திரும்பியது.

புவியியலாளர் சொல்வது என்ன?

பனிமூட்டம் தொடர்பாக புவியியலாளர் ஒருவர் கூறுகையில் உலகம் வெப்பயமாதல், பருவகால மாற்றம் தான் இதற்கு காரணம். அனல் மின் நிலையம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காற்று மண்டலத்தை தாக்கி உள்ளது. இந்த புகை, சூரிய ஒளியினால் பனி உருகுவதை தடுத்து இருக்கிறது. இது பனிமூட்டம் மட்டும் அல்ல, ஒரு வகையான காற்று மாசு என்று தான் சொல்லவேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் வந்து விட்டதையே இது காட்டுகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com