பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெருக்கடி

சிக்னலில் போலீசார் இல்லாததால் பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெருக்கடி
Published on

பொள்ளாச்சி

சிக்னலில் போலீசார் இல்லாததால் பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

போக்குவரத்து நெருக்கடி

பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கேரளாவுக்கு செல்லும் முக்கிய பாதையாக இருப்பதால் தினமும் ஏராளமான வாகனங்கள் பொள்ளாச்சி வழியாக சென்று வருகின்றன.

இதன் காரணமாக பொள்ளாச்சியில் எப்போது வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த நகரில் காந்தி சிலை, பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிக்கு சென்றதால் சிக்னலில் போலீசார் யாரும் இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் தாறுமாறாக சென்றன.

இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்ற பாலமுருகன் என்பவர் பார்த்தார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார். ஆனால் வாகன ஓட்டிகள் மீண்டும் தாறுமாறாக சென்றனர்.

இதனால் அவர் அங்கிருந்து சென்று விட்டார். பொள்ளாச்சியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மாற்று ஏற்பாடு

பொள்ளாச்சி நகரில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்காக தான் பொள்ளாச்சியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பாதுகாப்பு பணிக்கு வெளியூருக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டாலும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் மாற்று ஏற்பாடாக போலீசார் அல்லது ஊர்க்காவல் படையினரை நியமிக்க வேண்டும்.

போலீசார் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து தினமும் போலீசார் சிக்னல் பகுதியில் பணிபுரிவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com