வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உதவி மையம் - வசந்தகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உதவி மையத்தை வசந்தகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உதவி மையம் - வசந்தகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
Published on

நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் முடங்கி உள்ளனர். தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இதற்கான முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அந்தந்த பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவித்தார்.

அந்த வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்திலும் ராபர்ட் புரூஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு உதவி மையம் நாகர்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ் தலைமை தாங்கினார். உதவி மையத்தை வசந்தகுமார் எம்.பி. தொடங்கி வைத் தார்.பின்னர் அவர் கூறுகையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. தமிழக அளவில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வேலைக்கு வந்த இடத்தில் உணவில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

உதவி மைய ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்புரூஸ் பேசும் போது கூறியதாவது:-

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த மையத்தின் வாயிலாக 3 விதமான பணிகள் நடைபெறும். குமரி மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும், குமரி மாவட்டத்தில் இருந்து வேலைக்கு சென்று பிற மாநிலங்களில் தவித்து வருகிற மக்களை இங்கு அழைத்து வரவும், தமிழகத்தில் இருந்து பிறநாடுகளில் தவித்து வருகிறவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வரவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.

குமரி மாவட்டத்தில் மட்டும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகின்றனர். இவர்களுக்கு வசதியாக 10 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் உதவியுடன் பெயர் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். அதன் பின்னர் இந்த விவரங்களை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி தமிழக அரசை அணுகி பஸ், ரெயில்கள் மூலம் இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் ஜெயச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com