ஊரடங்கில் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு உதவிய முதன்மை செயலாளர் அமிதாப் குப்தா பட்னாவிசால் நியமிக்கப்பட்டவர் - சிவசேனா குற்றச்சாட்டு

முதன்மை செயலாளர் அமிதாப் குப்தா தேவேந்திர பட்னாவிசால் நியமிக்கப்பட்டவர் என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
ஊரடங்கில் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு உதவிய முதன்மை செயலாளர் அமிதாப் குப்தா பட்னாவிசால் நியமிக்கப்பட்டவர் - சிவசேனா குற்றச்சாட்டு
Published on

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யெஸ் வங்கியிடம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பிரபல ரியல்எஸ்டேட் நிறுவனமான டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிபர்களான கபில் வதாவன் மற்றும் தீரஜ் வதாவன் சகோதரர்களை வருகிற 17-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதேபோல யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் 2 பேருக்கும் எதிராக கோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து இருந்தது.

எனினும் கொரோனா பிரச்சினையை காரணம் காட்டி 2 பேரும் அமலாக்கத்துறை அலுவலகத்திலும், கோர்ட்டிலும் ஆஜராகாமல் இருந்தனர். இந்தநிலையில் ஊரடங்கு அமலில் உள்ளபோது கன்டலாவில் இருந்து மலைவாசஸ்தலமான மகாபலேஷ்வருக்கு 300 கி.மீ. தூரம் காரில் சென்றதாக கபில் வதாவன், தீரஜ் வதாவனை குடும்பத்தினர் 21 பேருடன் போலீசார் பிடித்தனர்.

இவர்கள் அவசர தேவைக்காக காரில் செல்வதாக கூறி சிறப்பு முதன்மை செயலாளர் அமிதாப் குப்தா அனுமதி வழங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி அமிதாப் குப்தா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பின்விளைவுகள் தெரிந்தும் ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி இதுபோன்ற தவறை செய்ய வாய்ப்பில்லை என கூறி பா.ஜனதா, மாநில அரசை மறைமுகமாக குற்றம் சாட்டியது.

இந்தநிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீரஜ் வதாவன் மற்றும் கபில் வதாவன் மகாபலேஷ்வர் வரை செல்ல அனுமதி கொடுத்த அதிகாரி அமிதாப் குப்தா முந்தைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசால் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டவர். எனவே அமிதாப் குப்தாவின் திறமை தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றாக தெரிந்து இருக்கும்.

தற்போது மாநில அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில், அமிதாப் குப்தாவின் முடிவுக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களே சுயவிளக்கமும் கொடுத்து உள்ளனர். கபில், தீரஜ் சகோதரர்களுக்கு மாநில அரசு உதவி செய்ய திட்டமிட்டு இருந்தால், சத்தாரா மாவட்ட கலெக்டர் ஏன் வதாவனின் சொகுசு கார்களை பறிமுதல் செய்து அவர்களை தனிமைப்படுத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com