ஐகோர்ட்டு விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவேண்டும்

ஐகோர்ட்டு விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார்.
ஐகோர்ட்டு விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவேண்டும்
Published on

தஞ்சாவூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சிலைகளை 10 அடி உயரத்திற்கு மேல் அமைக்கக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே வைக்கவேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்கள் தீப்பிடிக்காத வண்ணம் தகர கொட்டகையால் அமைக்கப்படவேண்டும். அங்கு தீயணைப்பு கருவிகள் இருக்கவேண்டும்.

விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அதேபோல, அமைப்பாளர்கள் சார்பில் குறைந்தபட்சம் 2 பேராவது பாதுகாப்பு பணியில் இருக்கவேண்டும். பட்டாசு வெடிக்ககூடாது. கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பிரசாரம் இருத்தல் வேண்டும். இதில் தமிழர் பண்பாடு, கலாச்சாரம் பற்றி எடுத்துரைக்கலாம். கடந்த முறை வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகே சிலைகள் வைப்பதை தவிர்க்கவும். அதேபோல, சிலைகளை வைத்தபின் அந்தப்பகுதி இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

மேலும் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளை சிலை அமைப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம். சிலைகளை மாட்டு வண்டிகளில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்த இந்து அமைப்புகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் நடத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றி சிலை அமைப்பாளர்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பான முறையில் நடத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், புதிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்கவும், சிலைகளை கொண்டு செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் எனவும், ஊர்வலம் செல்லும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அடைக்கவேண்டும் மற்றும் ஊர்வலத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதுபற்றி பரிசீலிப்பதாக போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், ரவிசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com