விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிதி வழங்க பேச்சுவார்த்தை நடத்தி சுமுகதீர்வு - அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் உள்ள விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாணைப்படி உரிய நிதி வழங்க அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமுகதீர்வு காணப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிதி வழங்க பேச்சுவார்த்தை நடத்தி சுமுகதீர்வு - அமைச்சர் தங்கமணி பேட்டி
Published on

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் நடைபெற்ற அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மின்துறை அமைச்சர் தங்கமணி இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான ஆணைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

எலச்சிபாளையத்தில் பணிக்கு செல்லும் மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 29 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 396 மகளிர் பயனாளிகளுக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான ஆணைகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட 13 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1,584 மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1,678 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 3,262 விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழக அரசு கிராமப்புற பகுதிகளில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மகளிர் நலம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலம் முழுவதும் திட்டப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் திட்டங்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன்கள், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டும் பெருகிவரும் மக்கள்தொகையை கருத்தில்கொண்டும் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து, அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இப்பகுதிகளில் தடையின்றி கிடைக்கும். இதுபோன்று மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு நகர்ப்புறங்களிலும் கிராமப்புற பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் சென்ற ஆண்டு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக இம்மாவட்டத்தில் உள்ளதால் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்து அதிக தேவை உள்ளதை அறிந்து தமிழக அரசு இந்த ஆண்டு 6 ஆயிரம் ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளது. இதற்கான மனுக்கள் எந்தவித கால நிர்ணயமின்றி தொடர்ந்து பெறப்படும்.

பரமத்தி (பகுதி), மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் ஒன்றியங்களில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு உடனடியாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திட்ட ஆய்வு முடிந்தவுடன் அதற்குண்டான நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். பூலாம்பட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் குறித்து, தற்போதைய நிலைமையை விவசாயிகள் மற்றும் சங்கங்களிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளோம். விதிமுறைகளின்படி, முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. சில அமைப்புகள், சங்கங்கள், முதல்-அமைச்சரின் தேர்தல் பிரசார நேரத்தில் அவரை சந்தித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாணைப்படி உரிய நிதி வழங்க அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். அப்போது சுமுகதீர்வு காணப்படும். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் விவசாயிகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகே நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, மாவட்ட கலெக்டர் மெகராஜ், உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம்.டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com