கல்வராயன் மலைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு

கல்வராயன் மலைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வராயன் மலைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு
Published on

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இந்த மலை பகுதியில் வெள்ளி மலை, கரியாலூர், கொடுந்துறை, குடியாத்தம், இந்நாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இதில், வெள்ளி மலையில் பஸ் நிலையத்தை தலைமையிடமாக கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து தினசரி காலை 7 மணி, 9 மணி, 11 மணி, 12 மணி உள்ளிட்ட நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

இதன் மூலம் மாலைவாழ் கிராம மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய நகர பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. இதேபோலன்று மலை மீது அமைந்துள்ள சேராப்பட்டு, கிளக்காடு, மூலக்காடு பகுதிக்கு சங்கராபுரம் பகுதியில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்களும் வெள்ளிமலை பகுதிக்கு வந்து செல்லும்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மலை கிராமங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது மலை கிராம மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

மலையில் வசிப்பவர்கள் அனைவரும் அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கை சக்கரத்தை ஓட்டி வருபவர்களே ஆவார்கள். இவர்கள் வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மலை கிராமத்துக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை நம்பியே இருந்தனர்.

ஏற்கனவே கொரோனா முழு ஊரடங்கால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான இவர்கள், தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கியது முதல் சற்று ஆறுதலாக இருந்தது வந்தது. மக்களும் தங்களது அன்றாட பணிக்கு திரும்பி, இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இந்த நிலையில் அவர்களது வாழ்க்கையில் ஓர் பேரடியாக தற்போது இந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது அமைந்துள்ளது. எந்தவித வேலைக்கும் போக முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு அரசு போக்குவரத்து கழகம் தள்ளி உள்ளது.

இதுகுறித்து மலைகிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், தினசரி கூலி வேலைக்காக சங்கராபுரம் பகுதிக்கு சென்று வருவேன். ஆனால் தற்போது பஸ் இயக்கப்படாததால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. என்னை போன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் முழுமையான பதிலை அளிக்கவில்லை. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com