உச்சிப்புளியில் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் 11 பெண்கள் உள்பட 46 பேர் மீது வழக்கு

உச்சிப்புளி புதுமடத்தில் உள்ள சத்திரத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணியினர் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 11 பெண்கள் உள்பட 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சிப்புளியில் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் 11 பெண்கள் உள்பட 46 பேர் மீது வழக்கு
Published on

பனைக்குளம்,

மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுமடம் கிராமத்தில் உள்ள மீனவர்களின் நலன் கருதி கிழவன் சேதுபதி என்பவர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமான சத்திரத்தை உருவாக்கினார். மீனவர்கள் மற்றும் கடல் வழியாக வாணிபம் செய்பவர்கள், வழிப்போக்கர்கள் ஓய்வெடுத்து செல்வதற்காக இந்த சத்திரத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுதந்திரம் அடைந்த பின் இந்த சத்திர கட்டிடம் அரசுடைமையாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இடம் இந்துக்களுக்கு உரியது என 2 மாதங்களுக்கு முன்பு சிலர் அந்த சத்திரத்துக்கு வர்ணங்கள் பூசி அந்தப் பகுதியில் வசிக்க கூடியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த சத்திரத்தில் கம்பி வேலி வைத்து அடைத்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த புதுமடம் கிராம நிர்வாக அலுவலர் அன்சர் ராஜா ராமநாதபுரம் தாசில்தார் முருகவேலுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சப்-கலெக்டர் சுக புத்ரா, தாசில்தார் முருகவேல், துணை தாசில்தார் சுவாமிநாதன், மண்டபம் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் நில அலுவலர் ராதா வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுமடம் கிராம மக்களுக்கு பிரச்சினை ஏதும் வராத அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சத்திரத்தில் போடப்பட்டிருந்த வேலிகளை அப்புறப்படுத்தி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அந்த சத்திரத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் உச்சிப்புளியில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 40-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்தவுடன் உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் போலீசாருடன் சென்று மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினருடன் 20 நிமிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அனுமதி பெறாமல் பஸ் மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இது குறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், புதுமடம் கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான சத்திரம் மற்றும் தருமதேவதை ஆலயத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறார்கள், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட வேலி அகற்றப்பட்டு விட்டன. இவைகளை கண்டிக்கும் அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். என்றார். இதனிடையே மறியலில் ஈடுபட்டதாக 35 ஆண்கள், 11 பெண்கள் மீது உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com