பாபநாசம் 108 சிவாலயத்தில் சதய விழா கொண்டாட வேண்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை

பாபநாசம் 108 சிவாலயத்தில் சதய விழா கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் 108 சிவாலயத்தில் சதய விழா கொண்டாட வேண்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை
Published on

பாபநாசம்,

பாபநாசம் 108 சிவாலயம் உள்ள பகுதி கஞ்சிமேடு எனப்படுகிறது. இந்த கோவில் மூலவர் விமானம் பல்லவர் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்தது.

இந்த கோவில் முன்பு மிகப்பெரிய கோவிலாக இருந்திருக்க வேண்டும். பல அழிவுகளை கண்ட இந்த கோவில் பின்னாளில் மூலவரை சுற்றியுள்ள ஒரு திருச்சுற்றுடன் தக்க வைத்து கொண்டது.

108 சிவாலயத்தில் தொல்லியல் துறையினர் 5 சோழர்கால கல்வெட்டுகளை பதிவு செய்துள்ளார்கள். இதில் ஒன்று பர்வதவர்த்தினி அம்மன் கோவில் நுழைவு வாயில் கீழ்புற நிலைக்காலில் உள்ளது. இந்த கல்வெட்டு மூலம், இந்த கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் மறைவிற்கு பின் சிலை வைக்கப்பட்டு, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று விழா எடுக்கப்பட்டது என்ற தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது.

செங்கழுநீர் மலர்

இறைவன் திருமேனி முன்பு ராஜராஜசோழனின் திருமேனி எழுந்தருள செய்யப்படுகிறது. மூலவர் சிவலிங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்து, திருக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து ராஜராஜன் திருமேனியுடன் கூடிய திருவாச்சிக்கும், இறைவன் திருவாச்சிக்கும் செங்கழுநீர் மலர் சாத்தப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் விளக்கு எரிய வேண்டும். இத்தனை வைபவங்களையும் கண்டு களிக்கும் ராஜராஜ சோழன் திருமேனிக்கு விழா நிறைவாக பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சிக்குட்பட்ட பகுதி கோவில்களில், தஞ்சை பெரிய கோவில் உள்பட பல கோவில்கள் ஐப்பசி சதயவிழா மன்னர் வாழ்நாளில் கொண்டாடப்பட்டிருந்தாலும், ராஜராஜசோழன் மறைவிற்குப்பின் அவர் திருமேனிகள் முன் சதயவிழா நடந்தன என்பதும் அவற்றை கண்டுகளித்த ராஜராஜனின் திருமேனிக்கு பரிவட்ட மரியாதை செய்யப்பட்டதும் அரிய தகவலாக பாபநாசம் 108 சிவாலய கல்வெட்டில் பதிவாகி உள்ளது.

நடவடிக்கை

ஆனால் தற்போது பாபநாசம் 108 சிவாலயத்தில் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுவதில்லை. எனவே இந்த கோவிலில் சதய விழா கொண்டாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com