எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக “எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம்” - பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறல்

“எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம்” எனக்கூறி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறி அழுதார்.
எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக “எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம்” - பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. நான் பொதுவாக காய்ச்சல், தலைவலி என்றால் ஆஸ்பத்திரிக்கு செல்ல மாட்டேன். ஊசி போட்டுக்கொள்ள மாட்டேன். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி சென்ற எனக்கு இந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் எனக்கு செலுத்தி எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தி விட்டார்கள். இதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்று இருக்கலாம். சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையின்போது வேறு ஊசி ஏதும் போடவில்லை. ரத்தம் மட்டுமே செலுத்தப்பட்டது.

இந்த தவறு நடந்த பிறகு என்னை சந்தித்த மருத்துவ துறையினர் இதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கிறோம். அரசு வேலை, நிவாரணம் பெற்று தருகிறோம் எனக்கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. மருத்துவ துறையினரின் தவறான செயலால் இந்த சமுதாயம் ஒதுக்கும் நிலைக்கு என்னை தள்ளிவிட்டார்கள். எனக்கு மட்டுமின்றி என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைக்கும் போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதில் தவறு செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை தேவை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறிய போது கதறி அழுதார். பின்னர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மயக்கம் தெளிந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது, எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது, அழுது கண்ணீர் வற்றிவிட்டது. அரசு ஆஸ்பத்திரி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. என் மனைவிக்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை, ஆர்.டி.ஓ. காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் சந்தித்து அவர்களிடம் ஆறுதல் கூறி வருத்தமும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com