கோலார் தங்கவயல் சயனைடு மலையில் கே.ஜி.எப்.-2 படபிடிப்பு நடத்த இடைக்கால தடை - சிவில் கோர்ட்டு உத்தரவு

கோலார் தங்கவயல் சயனைடு மலையில் கே.ஜி.எப்.-2 படபிடிப்பு நடத்த இடைக்கால தடை விதித்து சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோலார் தங்கவயல் சயனைடு மலையில் கே.ஜி.எப்.-2 படபிடிப்பு நடத்த இடைக்கால தடை - சிவில் கோர்ட்டு உத்தரவு
Published on

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயலில் பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் உள்ள கழிவு மண்கள் தங்கவயல் முழுவதும் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அந்தப்பகுதி மக்கள் சயனைடு மலை என்று அழைத்து வருகின்றனர். இந்த சயனைடு மலையில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு படபிடிப்புகள் நடந்து வருகிறது. தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் ஒரு பாடல் காட்சி இங்கு படமாக்கப்பட்டது.

கன்னட நடிகர் யஷ் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கே.ஜி.எப். படத்தின் முதல் பாகத்தின் பெரும் பகுதி படபிடிப்பு இங்கு தான் நடந்தது. தற்போது கே.ஜி.எப்.-2 படத்தின் படபிடிப்பு இந்த மலையில் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராஷ்டிரிய பிரஜா சக்கர வியூகா கட்சியின் தேசிய தலைவர் என்.சீனிவாஸ் என்பவர், சயனைடு மலையில் கே.ஜி.எப்-2 படத்தின் படபிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் தங்கவயல் 2-வது கூடுதல் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோலார் தங்கவயல் புகழ்பெற்ற நகரமாகும். மாநிலத்தில் பெங்களூரு, மைசூருவுக்கு அடுத்தப்படியாக 3-வது நகரமாக கோலார் தங்கவயல் திகழ்கிறது. தங்க சுரங்கம் மூடப்பட்ட பிறகு அங்கு வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் கழிவுகள் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. அது சயனைடு மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த மலை மீது கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் 2-வது பாகத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இங்கு நடக்கும் படபிடிப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் மரங்களும் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மலை மீது படபிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை விசாரித்த சிவில் கோர்ட்டு நீதிபதி கிரண், சயனைடு மலை மீது கே.ஜி.எப்.-2 படபிடிப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com