

திருச்சி,
பெட்டவாய்த்தலை பழங்காவிரிதெரு பகுதியில் ஒரு சிலர் குருவிகளை பிடித்து அதனை கறியாக்கி விற்பனை செய்து வருவதாக மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வனசரக அலுவலர் பாலகிருஷ்ணன், வனவர் பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, 3 பேர் குருவிகளை பிடித்து அவற்றை கறியாக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
உடனே அவர்கள் 3 பேரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் குளித்தலை மேட்டுமருதூரை சேர்ந்த சண்முகம்(வயது 39), அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(27), மணப்பாறையை சேர்ந்த சதிஷ்குமார்(29) என்பதும், இவர்கள் வாரந்தோறும் இந்த வகை குருவிகளை பிடித்து கறியாக்கி விற்றுள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 350 குருவிகளில் 15 குருவிகளை உயிருடன் மீட்டனர். கறியாக்கி விற்பனைக்காக வைத்து இருந்த மற்ற குருவிகளை பறிமுதல் செய்து, 3 பேரையும் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட குருவிகளை எம்.ஆர்.பாளையம் காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.