இலவச பஸ்பாஸ் அட்டைகள் பறிமுதல் செய்ததை கண்டித்து: பஸ்சை சிறை பிடித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

பொன்னேரி அடுத்த சோழவரத்தில் மாணவ- மாணவியரின் இலவச பஸ்பாஸ் அட்டையை டிக்கெட் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததை கண்டித்து பஸ்சை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இலவச பஸ்பாஸ் அட்டைகள் பறிமுதல் செய்ததை கண்டித்து: பஸ்சை சிறை பிடித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
Published on

பொன்னேரி,

செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் அரசு பஸ் ஒன்று சோழவரம் பஸ் நிலையம் வந்து நின்றபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை பரிசோதித்து கொண்டிருந்தனர். அப்போது பஸ்சில் இருந்த பொன்னேரியில் உள்ள அரசுக்கல்லூரியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த அரசு இலவச பஸ்பாஸ் அட்டையை அவர்களிடம் காண்பித்தனர். இதைப்பார்த்த பரிசோதகர்கள் மாணவர்களிடம் இந்த பஸ்பாஸ் அட்டையை பயன்படுத்தி விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட பஸ்சில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும், இந்த பஸ்சில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்றும் கூறி அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. மேலும் மாணவ-மாணவிகளிடம் உள்ள அனைத்து பஸ்பாஸ் அட்டையை பறிமுதல் செய்து, அவர்களை வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் காட்டுத் தீ போல் பரவியது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்கள் பொன்னேரி பஸ் நிலையத்திற்கு சென்று நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்குள்ள ஊழியர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட இலவச பஸ்பாஸ் அட்டையை திரும்ப வழங்க கோரியும், சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அங்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார் மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com