தேர்தலில் வாக்களிக்க விடுமுறை: சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்காக வாக்குப்பதிவையொட்டி சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் விடுமுறை அறிவித்ததால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.
தேர்தலில் வாக்களிக்க விடுமுறை: சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தென் சென்னைக்கு உட்பட்ட தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை முதலே ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வியாபாரிகள், கடைகளை அடைத்து, விடுமுறை விட்டிருந்தனர்.

இதன்காரணமாக சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

பொதுமக்களின் நலன் கருதி மருந்தகங்கள் மட்டும் இயங்கின.

வெறிச்சோடிய சாலைகள்

விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால் சாலைகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, அடையாறு நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்கள், பஸ் நிலையங்கள், சந்தை பகுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் எங்குமே மக்கள், கூட்டத்தை காண முடியவில்லை.

களைகட்டிய அம்மா உணவகங்கள்

உணவகங்கள் மூடப்பட்டு, இருந்ததால் பெரும்பாலான மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள். மாற்று ஏற்பாடாக அம்மா உணவகங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சில கடைகள் முன்பு மாலை 6 மணிக்கு மேல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.

திறந்திருந்த ஒரு சில உணவகங்களிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோர கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது. ஆனால் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com