கடலூர் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் தொற்று குறித்து பணியாளர்கள் ஆய்வு - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் தொற்று குறித்து பணியாளர்கள் ஆய்வு - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரவலை தடுக்கும் வகையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 பேரை கண்டுபிடித்துள்ளோம்.

இவர்களில் 25 பேர் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறோம். இதன் முடிவு இன்று(நேற்று) அல்லது நாளை(இன்று) தெரியவரும். மேலும் 6 பேர் 28 நாட்களை கடந்தவர்கள் என்பதால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தவிர குறிப்பிட்ட 31 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 111 பேரையும் தனிமைப்படுத்தி இருக்கிறோம். மேலும் இவர்களின் வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் தெருக்களை சீல் வைத்து இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என அங்கன்வாடிபணியாளர்கள், கிராமசுகாதார செவிலியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து வருகிறார்கள்.

தனிமைப்படுத்தி இருப்பதன் மூலமே கொரோனாவை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 840 படுக்கைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இது தவிர கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை வார்டுகளை தர முன்வந்துள்ளது. மேலும் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் மூலம் 30 படுக்கைகளுடன் செயல்படும் மருத்துவமனையையும் தருவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் முன்வந்துள்ளது.

மேலும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. எத்தகைய பாதிப்புகள் வந்தாலும் அதை சமாளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com