வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,000-ஐ கடந்தது

வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,015.50-க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் கொதிப்படைந்து உள்ளனர்.
வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,000-ஐ கடந்தது
Published on

கள்ளக்குறிச்சி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஆரம்பத்தில் இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் என்ற அடிப்படையில் மாற்றியமைத்து வந்தன. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக உயர்ந்தது.

அதிரடி உயர்வு

வடமாநிலங்களான உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதேநேரம், வணிகப் பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 5 மாநில தேர்தல் முடிவடைந்ததுடன், ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்துவரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தின.

அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக அதிகரித்தது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் அதிரடியாக உயர்த்தின. இதன்படி, சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.1,015.50 ஆக உள்ளது. கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.305 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர்களை திரும்ப ஒப்படைப்பு?

விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொதிப்படைந்து உள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் கீழ் பெரும்பாக்கத்தை சேர்ந்த சிலம்புச்செல்வி கூறும்போது, அடிப்படை வசதிகளில் உணவு, உடை, இருப்பிடம் முக்கியமானவை. இதில் உணவு தயாரிக்க சிலிண்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சிலிண்டர் விலை ஏற்றம் கடுமையாக பாதிக்கிறது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்தால் எங்களைப் போன்றவர்கள் சிலிண்டர்களை திரும்ப ஒப்படைத்துவிட்டு டெபாசிட் தொகையை திரும்பக்கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.

கள்ளக்குறிச்சி சூலாங்குறிச்சி லூர்துமகிமைமேரி கூறுகையில், பட்ஜெட் வாழ்க்கை வாழ்ந்துவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களை மாதந்தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு கடுமையாக பாதித்து வருகிறது. தற்போது வருவாயைவிட செலவு அதிகரித்து வருவதால் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். இப்படியே சென்றால் மீண்டும் நம் முன்னோரைப் போன்று விறகு அடுப்பை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

சரியான எடையில் சிலிண்டர்

கள்ளக்குறிச்சி நதியா, சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,000-ஐ தாண்டி உள்ளது. அதனுடன் சிலிண்டர் கொண்டு வருபவருக்கு ரூ.50 தர வேண்டி உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் சிலிண்டர் ஒரு மாதம்கூட வருவதில்லை. கத்தரிக்காயை சரியான எடை போட்டு வாங்கும் மக்களுக்கு, சிலிண்டரை வீடுகளில் வழங்கும்போது எடை போட்டு சரியான எடையில் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழுப்புரம் தந்தை பெரியார் தெரு கலைமணி கூறும்போது, சிலிண்டர் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி விலை உயர்ந்துகொண்டே போனால் அடுத்த தலைமுறையினருக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் என்பதே தெரியாமல் போய்விடும். கச்சா எண்ணெய் விலை உயர்வு என்ற ஒன்றையே கூறிக்கொண்டு இருக்காமல், கியாஸ் உற்பத்தியை அதிகரித்து, விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com