வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

சேலத்தில் பெய்த பலத்த மழையால் அம்மாபேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
Published on

சேலம்,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சேலத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயில் கொளுத்தியநிலையில் திடீரென கனமழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது.

சேலம் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை 2-வது புதுத்தெருவில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் வெளியே செல்லமுடியாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் தண்ணீர் சூழ்ந்ததால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். இரவு முழுவதும் தூங்காமல் தவித்த அவர்கள், நேற்று காலையில் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

பொன்னம்மாபேட்டை பகுதியில் சாக்கடை கால்வாய்களை சரிவர தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் சாக்கடையில் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகவும், எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால் குளம்போல் காட்சியளித்தது. இதனால் நேற்று காலையில் வழக்கம்போல் நடைபயிற்சிக்கு வந்தவர்கள், சரிவர பயிற்சியில் ஈடுபடமுடியவில்லை.

கிச்சிப்பாளையம், மணக்காடு ராஜகணபதி நகர், களரம்பட்டி, பள்ளப்பட்டி, மணியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் மழைநீர் தெருக்களில் ஆறாக ஓடியது. இதேபோல், ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், மின்னாம்பள்ளி, காரிப்பட்டி, பேளூர், கருமந்துறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் முனியப்பன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் இந்த கோவில் அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஏற்காட்டில் உள்ள மலைக் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று காலையில் கடும் மேக மூட்டம் நிலவியது. இதன் காரணமாக மலைப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதே போல ஓமலூர் பகுதியில் பெய்த பலத்த மழையினால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் மழை காரணமாக கணவாய்புதூர் சொசைட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் பகுதி இடிந்து சேதம் அடைந்தது. இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

ஓமலூர்-69.4, ஏற்காடு-63, வாழப்பாடி-48, காடையாம்பட்டி-44, ஆணைமடுவு-43, கரியகோவில்-32, பெத்தநாயக்கன்பாளையம்-32, வீரகனூர்-30, சேலம்-25, மேட்டூர்-10.8, ஆத்தூர்-10.4, கெங்கவல்லி-8.4, எடப்பாடி-3.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com