தேனியில் பரபரப்பு சம்பவம்: ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் கிழிப்பு-சாலை மறியல்

தேனியில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை என்று கூறி அவருக்காக வைத்திருந்த பேனர்களை தொழிலாளர்கள் கிழித்ததுடன், சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனியில் பரபரப்பு சம்பவம்: ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் கிழிப்பு-சாலை மறியல்
Published on

தேனி,

தேனி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தேனி மாவட்ட மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா, 3-வது மாவட்ட மாநாடு, புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் போஸ் தலைமை தாங்கினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுவார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரை வரவேற்று பெரியகுளம் சாலை மற்றும் தாலுகா அலுவலகம் சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணியளவில் இந்த விழா தொடங்கியது.

இந்தநிலையில் பிற்பகல் 3 மணியளவில் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் சிலர் அங்கு ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் வைத்திருந்த பேனர்களை கிழித்தனர். மேலும், அந்த பகுதியில் திருநங்கைகள் மாநில மாநாடு தொடர்பாக வைக்கப்பட்ட பேனர்களும் கிழிக்கப்பட்டன. அத்துடன் அவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தங்களின் விழாவுக்கு வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு வராமல் உள்ளதாக கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் அறிந்து மாலை 4.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் விழா நடந்த மண்டபத்துக்கு வந்தார். அவரை விழா ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர். பின்னர் அவரிடம் சங்க நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழகத்தில் மருத்துவர் சமுதாயத்துக்கு 5 சதவீதம் தனி உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் கொத்தடிமைகளாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் நடத்தப்படுவதால் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். அறநிலையத்துறை கோவில்களில் உள்ள முடி எடுக்கும் தொழிலாளர்களையும், மேளம் வாசிப்பவர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com