அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிள்ளியூர் தொகுதியில் தேன் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் - காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வாக்குறுதி

கிள்ளியூர் தொகுதியில் தேன் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் பிரசாரம் செய்தார்.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிள்ளியூர் தொகுதியில் தேன் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் - காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வாக்குறுதி
Published on

கருங்கல்,

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் நேற்று கீழ்குளம் ஜங்ஷனில் இருந்து திறந்த ஜீப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஆனான்விளை, வில்லாரிவிளை, குமரி நகர், அரசகுளம், பாலக்காவிளை, விழுந்தையம்பலம், அருவை, சீயோன்நகர், கீழ்குளம், வலியவிளை, மேல்மிடாலம் திருப்பு, இனயம் திருப்பு, பாரக்கான்விளை, காட்டுவிளை, சீயோன்பாறை, தெருவுக்கடை, தேவிகோடு, புளியறவிளை, உதயமார்த்தாண்டம், கைதவிளாகம், கானவூர், இடைக்கோடு, பிச்சவிளை, குற்றிபாறவிளை போன்ற பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பல்வேறு சாலைகள் எனது முயற்சியால் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. மேலும் பல சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் நான் வெற்றிபெற்றவுடன் தொகுதியில் தேன் உற்பத்தியை ஊக்கப்படுத்த தேன் ஆராய்ச்சி மையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும். ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்.பி.எச். குறியீட்டை கொண்ட ரேஷன் அட்டைகளை மாற்றி தகுதியான அனைவருக்கும் பி.எச்.எச். குறியீடு கொண்ட ரேஷன் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடற்கரை கிராமங்களில் தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இயற்கை சீற்றத்தில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க நேர்கல், கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள். அத்துடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கும் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com