தொற்றுநோய் பரவல் நேரத்தில் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது மும்பை ஐகோர்ட்டு ஆதங்கம்

தொற்றுநோய் பரவல் நேரத்தில் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவல் நேரத்தில் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது மும்பை ஐகோர்ட்டு ஆதங்கம்
Published on

மும்பை,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளதுடன், அவர்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தையும் நிர்ணயித்து உள்ளது. ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகள் அரசின் விதிமுறைகளை மீறி கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன.

இந்தநிலையில், தானே மாவட்டத்தில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகள் முழுகவச உடைகள், கையுறைகள் மற்றும் என்95 முககவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்காகவும் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வக்கீல் அபிஜீத் மங்காடே மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தானே ஜூபிட்டர் ஆஸ்பத்திரியில் தனது தாய் கொரோனா அல்லாத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, மேற்படி மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.72 ஆயிரத்து 806 வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதேபோல தாதரில் உள்ள ஆஸ்பத்திரியும் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளையடிக்க கூடாது

அவரது மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி சாரங் கோட்வால் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

தொற்றுநோய் நேரத்தில் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது. முழுகவசஉடை, கையுறைகள் மற்றும் முககவசம் மருத்துவ உபகரணங்களை ஒரு நோயாளிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தலாம். ஆனால் மேற்கண்ட உபகரணங்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு நோயாளியிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஆஸ்பத்திரிகள் அதிக லாபம் ஈட்டுகின்றன.

ஆஸ்பத்திரிகளின் இந்த கொள்ளையை தடுப்பதை உறுதி செய்ய மாநில அரசிடம் நெறிமுறைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com