ஓசூர் பெண் கொலையில் தீவிர விசாரணை: தனிப்படை போலீசார் பாப்பாரப்பட்டி விரைவு

ஓசூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண் கொலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் துப்பு துலக்க தனிப்படை போலீசார் பாப்பாரப்பட்டி விரைந்தனர்.
ஓசூர் பெண் கொலையில் தீவிர விசாரணை: தனிப்படை போலீசார் பாப்பாரப்பட்டி விரைவு
Published on

ஓசூர்,

ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ராணி (45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். பூவரசன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். பூஜா பிளஸ்-2 படித்து வருகிறார்.

ராணி ஓசூர் நவதி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மகள் பூஜாவுடன் தங்கி வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இரவு பூஜா வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பின்னர் ராணி வீட்டில் இருந்து ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். வீட்டில் பூஜா தூங்கி விட்டார். தூக்கம் கலைந்து எழுந்து பூஜா பார்த்த போதும் ராணி வரவில்லை. பின்னர் விசாரித்தபோது நவதி அருகில் ராணி வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலையில் துப்பு துலக்க ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராணியிடம் செல்போனில் பேசிய மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊர்? என்பது மர்மமாக உள்ளது. அவரை பற்றி போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசார் பாப்பாரப்பட்டிக்கு விரைந்து உள்ளனர். போலீசாரின் விசாரணையில் விரைவில் துப்பு துலங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com