இன்னும் சீரமைக்கப்படாத வீடுகள், பள்ளி கட்டிடங்கள் மரங்களும் முழுமையாக அகற்றப் படவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் பள்ளி கட்டிடங்கள், வீடுகள் சீரமைக்கப்படவில்லை. மரங்களும் முழுமையாக அகற்றப்படவில்லை.
இன்னும் சீரமைக்கப்படாத வீடுகள், பள்ளி கட்டிடங்கள் மரங்களும் முழுமையாக அகற்றப் படவில்லை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வத்தனா கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பல குடிசைகள் கஜா புயலால் சேதம் அடைந்தன. மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடி அந்த குடிசை வாசிகள் அங்கேயே வசித்து வருகிறார்கள். தங்களுக்கு இதுவரை அரசின் நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. தார்ப்பாயை கூட நாங்கள் கடையில் காசு கொடுத்து வாங்கி தான் போட்டு உள்ளோம் என்றார்கள்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆதனக்கோட்டை ஊராட்சியில் உள்ளது மடத்துக்குளம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக காட்சி அளிக்கிறது. பள்ளி குழந்தைகள் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை- தஞ்சாவூர் மெயின்ரோட்டில் உள்ளது பெருங்களூர். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏராளமான சவுக்கு மற்றும் தைல மரங்கள் கஜா புயலால் சரிந்தும், முறிந்தும் விழுந்து உள்ளன. அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு விட்டால் இந்த மரங்கள் மாணவர்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் இங்கு மீட்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திட்டம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், பள்ளிகள் சேதம் அடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com