

தேனி,
உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி குறைபாடு உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில், பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரையுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சிறப்பு மையங்களில் குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை கையாள்வது எப்படி? என்ற சிறப்பு பயிற்சி தேனி வட்டார வளமையத்தில் நேற்று நடத்தப்பட்டது. பயிற்சியை உதவி திட்ட அலுவலர் அய்யப்பன் தொடங்கி வைத்தார். சென்னையில் பயிற்சி பெற்று வந்த 6 பயிற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியின் போது கூறப்பட்ட அறிவுரைகள் வருமாறு:-
குழந்தைகளுக்கு பிறந்த நாளில் இருந்து குறிப்பிட்ட மாத இடைவெளியில் இயற்கையான உடல் வளர்ச்சி இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். கை, கால்கள் செயல்பாடு சரியாக இருக்கிறதா? என்று கண்டறிந்து, தேவையான சிறு, சிறு உடற்பயிற்சிகள் செய்ய வைக்க வேண்டும். தானே உணவு எடுத்து உண்ணாமை, கழிப்பிடம் செல்லும் உணர்வு இல்லாமை போன்ற பிரச்சினைகள் இருந்தால், அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகள் கழிப்பிடம் செல்லும் நேரத்தை கணக்கிட்டு, அவர்களை கழிப்பிடத்துக்குள் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு தொடர்ந்து பழக்கினால் அவர்கள் தங்களுக்கான அடிப்படை செயல்பாடுகளை தாங்களே செய்து கொள்ளும் நிலை உருவாகும். குழந்தைகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு இயல்பாக மன, உடல் ரீதியாக எந்த செயல்பாடு இல்லையோ அந்த செயல்பாட்டுக்கு தேவையான பயிற்சி, சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை பருவத்திலேயே இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்வதற்கான வழிமுறைகள் அதிகம் உள்ளன. எனவே, பெற்றோர்கள் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு பயிற்சியின் போது கூறப்பட்டது.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.