பேரிடரின் போது உபகரணங்களை செயல்படுத்துவது எப்படி? - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் மீட்புக்குழுவினர் விளக்கம்

பேரிடரின் போது உபகரணங்களை செயல்படுத்துவது எப்படி? என்பது குறித்து டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் மீட்புக்குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.
பேரிடரின் போது உபகரணங்களை செயல்படுத்துவது எப்படி? - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் மீட்புக்குழுவினர் விளக்கம்
Published on

நாகர்கோவில்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கரையை கடந்த போது தமிழகத்தின் நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களை உலுக்கி எடுத்துச் சென்றது. இதையொட்டி கடற்கரையோர மாவட்டங்கள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்ட ஆயுதப்படையிலும் பேரிடர் மீட்பு பயிற்சிகள் முடித்த போலீசார் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் என மொத்தம் 120 போலீசார் தயாராக இருந்தனர். மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக ரப்பர் படகு, மிதவை டியூப்கள், மிதவை ஜாக்கெட், முறிந்து விழுந்த மரங்களை அகற்ற மரம் அறுப்பு எந்திரம், மற்றும் சாதனங்கள், மீட்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கான உபகரணங்களும் குமரிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் நேற்று காலை நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு சென்றார். அங்கு பேரிடர் மீட்பு படையினரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கஜா புயல் குமரி மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் வரக்கூடிய காலங்களில் பேரிடர் ஏற்பட்டாலோ, வடகிழக்கு பருவ மழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலோ பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து சேர்வதற்குள், நீங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் மீட்பு பணிக்கான ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேரிடரின் போது உபகரணங்களை செயல்படுத்துவது எப்படி? என்பது குறித்து மீட்புக்குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர்.

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், துணை சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் கண்மணி (தனிப்பிரிவு), கிறிஸ்டோபர் தம்பிராஜ் (ஆயுதப்படை) ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com