கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து திராட்சையை பாதுகாப்பது எப்படி? விஞ்ஞானிகள் விளக்கம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், கொளுத்தும் வெயிலில் இருந்து திராட்சையை பாதுகாப்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து திராட்சையை பாதுகாப்பது எப்படி? விஞ்ஞானிகள் விளக்கம்
Published on

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னைக்கு அடுத்தபடியாக கருப்பு திராட்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துகிறது. இதனால் திராட்சையின் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து திராட்சையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பார்த்திபன், சுப்பையா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம் போன்ற பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக 35 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக உள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக திராட்சை கொடிகளை கவாத்து செய்து 25 முதல் 50 நாட்கள் வரையிலான தோட்டங்களில், பூங்கொத்துக்களில் மகரந்த தூள்கள் அதிக வெப்பநிலையில் ஈரப்பசையற்று கருகி விடும். இதனால் பூக்களில் மகரந்த சேர்க்கை குறைந்து இளம்பிஞ்சுகள் உதிர்ந்து அதிகப்படியான மகசூல் இழப்பு ஏற்பட காரணமாகிறது.

இதைத்தவிர மண்ணின் ஈரப்பதம் நீராவியாகும் போக்கு, மிகவும் அதிகமாக 8.மி.மீ. முதல் 10 மி.மீட்டர் வரை தென்படுவதால் திராட்சை கொடிகளில் இருந்து நீர் ஆவியாவதும் அதிகமாகிறது. இதனை தவிர்க்க, திராட்சை தோட்டங்களில் கொடிகளின் தூர்ப்பகுதிகளை காய்ந்த இலை தழைகள், சருகுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றினால் விவசாயிகள் மூட வேண்டும்.

மேலும் சொட்டுநீர் பாசனம் உள்ள தோட்டங்களில் காலை, மாலை வேளைகளில் ஒரு ஏக்கர் பரப்புக்கு பாசன நீரின் அளவு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் லிட்டர் போன்ற அளவில் பாய்ச்ச வேண்டும்.

வறட்சி தாக்குதலினால் ஏற்படும் இலை கருகல், இலைகள் மஞ்சளாதல், பூங்கொத்து கருகல் மற்றும் பூக்கள் உதிர்தல் போன்றவற்றினை கயோலினைட் மற்றும் சிலிகான் அடங்கிய பயிர் வளர்ச்சி தெளிப்பான்களை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி என்ற அளவில் உபயோகப்படுத்தி குறைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com