மத்திய சிறையில் மனித உரிமை ஆணைய அதிகாரி திடீர் ஆய்வு; கைதிகள் சரமாரி புகார்

வேலூர் மத்திய சிறையில் மனித உரிமை ஆணைய அதிகாரி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது சிறை அதிகாரிகள் மீது கைதிகள் சரமாரியாக புகார் அளித்தனர்.
மத்திய சிறையில் மனித உரிமை ஆணைய அதிகாரி திடீர் ஆய்வு; கைதிகள் சரமாரி புகார்
Published on

வேலூர்,

வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மத்தியசிறை உள்ளது. ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு சிறைத்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அவரை சிறைத்துறை அதிகாரிகள் மனரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறினார்.

இந்த நிலையில் நேற்று காலை மனிதஉரிமைகள் ஆணைய அதிகாரி சித்தரஞ்சன்தாஸ் வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். அவர் முதலில் ஆண்கள் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கைதிகளுக்கு குடிநீர், கழிவறை, அவர்கள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா, அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்கிறதா, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுசெய்தார்.

பின்னர் பெண்கள் சிறைக்கு சென்று அங்கும் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கைதிகள் பலர் சிறை அதிகாரிகள் குறித்து சரமாரியாக புகார் தெரிவித்ததாகவும், சிலர் தங்கள் பிரச்சினைகள் குறித்து முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com