திருவள்ளூர் அருகே பறவைகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 8 பேர் கைது 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே பறவைகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள்,7 கத்தி களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே பறவைகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 8 பேர் கைது 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வலசைவெட்டிக்காடு கிராமத்தில் வயல்வெளி நடுவில் உள்ள ஒரு வீட்டில் சிலர் துப்பாக்கிகளுடன் பதுங்கி இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், நேற்று திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில், மாவட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் உள்ளிட்ட போலீசார் வலசைவெட்டிக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு வலசைவெட்டிக்காடு கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அருள்குமார் (வயது 25) என்பவரின் வீட்டிற்குள் சென்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அங்கு 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள், டார்ச் லைட்டுகள், பேட்டரிகள் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அருள்குமாரிடம் விசாரித்தபோது, அவருடன் சேர்ந்து வீட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், கப்பாங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த சுனில் கருணாகரன் (39), சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாபு (51), சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (48), அயனாவரத்தை சேர்ந்த சிலம்பரசன் (30), கொரட்டூரை சேர்ந்த பூபாலன் (31), மாம்பாக்கத்தை சேர்ந்த ஞானமூர்த்தி (27), செங்கல்பட்டு மாவட்டம், காரணை புதுச்சேரியை சேர்ந்த தங்கராஜ் (35) உள்ளிட்ட 8 பேர் இருந்தது தெரியவந்தது.

மேலும் அங்கு இருந்த 4 துப்பாக்கிகளும் சுனில் கருணாகரன், பாபு, ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமானது என்றும், அதற்கான லைசென்சுகளை அவர்கள் வைத்து இருந்ததும் உறுதியானது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 பேரும் அருள்குமாரின் வீட்டில் இரவு நேரங்களில் தங்கி பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மேற்கண்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 4 நாட்டு துப்பாக்கிகளும், 7 கத்திகள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com