சூறாவளி காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன வீடு சேதம்

குமரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. மேலும் வீடு சேதம் அடைந்தது.
சூறாவளி காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன வீடு சேதம்
Published on

பூதப்பாண்டி,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து ஓரளவு குளிர்ச்சி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மலையோர பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது.

அருமனை, நல்லூர்கோணம், தெற்றிவிளை, குரூர், குழிச்சல், களியல் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள், ரப்பர் மரங்கள் சாய்ந்தன.

கடையல் பேரூராட்சியில் ஆம்பாடியில் அருள் என்பவரின் வீட்டு மேற்கூரை சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாயின. இதுபோல், திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், அவ்வை ஏலாக்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தன.

இந்த வாழைகளில் பெரும்பாலானவை குலை தள்ளிய நிலையில் இருந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பூதப்பாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டுப்புதூர், மண்ணடி, ஆட்டுப்பாறை போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. காட்டுப்புதூரை சேர்ந்த பால்பாண்டி (வயது 58) என்பவர் 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 1700 வாழைகள் பயிர் செய்திருந்தார். நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் வாழைகள் அனைத்தும் முறிந்து விழுந்து ரூ. 2 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதுபோல் இந்த பகுதியில் ஏராளமான வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com