

சென்னை,
சென்னை மயிலாப்பூர் டி.எஸ்.வி. தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 68). இவரது மனைவி பத்மினி (61). முதியவரான இருவரும் வீட்டில் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்மினி சமையல் அறையில் காபி போடுவதற்காக சென்றார். அப்போது கியாஸ் சிலிண்டரை திறந்து தீ பற்ற வைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டர் மிகுந்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் வீட்டில் தனியாக இருந்த சத்தியநாராயணன் மற்றும் அவரது மனைவி பத்மினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து முதியவர்கள் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.