

கணவன்-மனைவி தகராறு
சென்னை தண்டையார்பேட்டை செல்வ விநாயகர் கோவில் சந்து தெருவைச் சேர்ந்தவர் அரி (வயது 27). இவர், கடந்த 2014-ம் ஆண்டு வரை வண்ணாரப்பேட்டை போலீசில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். தற்போது கார் விற்பனை நிலையத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி ஜீவிதா (24). இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை.
கடந்த 27-ந் தேதி இரவு ஜீவிதாவின் தந்தை மகேந்திரன், மகளை பார்க்க வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மகேந்திரன், தனது வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டார்.
தற்கொலை
இதற்கிடையில் குடும்பத் தகராறால் ஆத்திரம் அடைந்த அரி, வீட்டில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தியதால் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஜீவிதா குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டதாக கூறி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார், முதலில் ஜீவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அடித்துக்கொலை
ஆனால் ஜீவிதாவின் கழுத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார், அரியிடம் விசாரித்தனர். போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. கண்ணப்பன் முன்னிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டர் கோகுலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜீவிதாவின் மார்பில் கடுமையாக தாக்கப்பட்டதால் அவர் இறந்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார், அரியிடம் மேலும் விசாரித்தனர். அதில் அரி, குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு, அவர் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது. இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், மனைவியை அடித்து கொன்ற அரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.