

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் (வயது 60). இவருக்கு கனகவல்லி (54) என்ற மனைவியும், கோபிநாத் (27) என்ற மகனும் உள்ளனர். தொழில்நுட்ப பட்டதாரியான கோபிநாத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேல் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவரது குடிசை மின்கசிவு காரணமாக எதிர்பாரதவிதமாக தீப்பற்றி எரிந்தது.
இதை பார்த்த வடிவேல், தன்னுடைய மனைவி கனகவல்லி, கோபிநாத் ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி தப்பினார். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவி முழுமையாக எரிய தொடங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். இருப்பினும் குடிசை எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம், மடிக்கணினி, துணிமணிகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாமான்கள், பீரோ, கட்டில், டி.வி. மற்றும் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் கருகியது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.