அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தியும், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவிக்கவில்லை. மாற்று ஏற்பாடு செய்யும் வரை தலைவர் பதவியில் நீடிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் பலமாக அடிபடுகிறது. ஏனென்றால் அவர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது, மத்திய அரசின் குறைகளை மிக தெளிவாக குரல் எழுப்பி பேசினார். இந்த விஷயத்தில் அவருக்கு கட்சியின் மேல்மட்டத்தில் நற்பெயர் உள்ளது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இருக்கிறேன் என்று சொல்வதே தவறு. தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. அந்த பதவியில் ராகுல் காந்தியே நீடிப்பார். மூத்த தலைவர்களின் கோரிக்கையை அவர் ஏற்பார்.

தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், காங்கிரசில் எனது பணி எப்போதும் போலவே உள்ளது. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றதால், எங்களின் இதயத்தை (கர்நாடகம்) இழக்க முடியாது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டு எழும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com