வடகர்நாடக தனி மாநில கோரிக்கையை ஆதரிக்க மாட்டேன் மேல்-சபை தலைவர் பேட்டி

வட கர்நாடகத்திற்கு தனி மாநில கோரிக்கையை ஆதரிக்க மாட்டேன் என்று மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறினார்.
வடகர்நாடக தனி மாநில கோரிக்கையை ஆதரிக்க மாட்டேன் மேல்-சபை தலைவர் பேட்டி
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வட கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சில மடாதிபதிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் வட கர்நாடகத்தை மாநில அரசு புறக்கணித்துவிட்டதாகவும், அதனால் தங்கள் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி வடகர்நாடகத்தைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக பட்ஜெட்டில் வட கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அவ்வாறு புறக்கணிக்கப்பட்டு இருந்தால் அதுபற்றி குமாரசாமியுடன் பேசி அதை சரிசெய்ய முயற்சி செய்வோம். அதைவிடுத்து வட கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல. இந்த தனி மாநில கோரிக்கையை நான் ஆதரிக்க மாட்டேன். அகண்ட கர்நாடகம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

சிலர் தனிப்பட்ட அரசியலுக்காக இந்த விஷயத்தை கையில் எடுத்து மாநிலத்தை உடைக்கும் கருத்தை தெரிவிக்கிறார்கள். இதை சில மடாதிபதிகளும் ஆதரித்து பேசி வருகிறார்கள். மடாதிபதிகளுக்கு அரசியல் தேவையா?. தனி மாநில விஷயம் குறித்து குமாரசாமியுடன் பேசினேன். அவருடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறினார்.

வட கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரும் கோரிக்கையை ஆதரிப்பது இல்லை என்றும், கட்சியினர் யாரும் இதுபற்றி ஆதரவாக கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா அறிவுறுத்தினார். இந்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த நேரு ஓலேகர் எம்.எல்.ஏ., தனி மாநில கோரிக்கையை ஆதரிப்பதாக நேற்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com