கண்களால் பேசி காதலித்து மணம் புரிந்த மாற்றுத்திறன் காதல் ஜோடி

காது கேட்காது, வாயும் பேச முடியாத மாற்றுத்திறன் கொண்ட காதல் ஜோடி கண்களால் பேசி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கண்களால் பேசி காதலித்து மணம் புரிந்த மாற்றுத்திறன் காதல் ஜோடி
Published on

சிக்கமகளூரு,

இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு, சித்ரதுர்கா மாவட்டம் எடியூர் தாலுகா பிடேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டரங்கப்பா. இவரது மனைவி சாரதம்மா. இவர்களது மகன் மஞ்சுநாத்(வயது 31). இவரால் சிறு வயது முதலே பேசவோ, கேட்கவோ முடியாது. இதையடுத்து இவரை இவருடைய பெற்றோர் சித்ரதுர்காவில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் சேர்த்தனர்.

அங்கு சேர்ந்து படித்த இவருக்கு, தன்னுடன் படித்த சக மாணவியான கெலமாரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கமலம்மா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கமலம்மாவிற்கும் பேசவோ, கேட்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறன் கொண்ட இவர்கள் 2 பேரும் காதலுக்கே உண்டான மவுன மொழியிலும், கண்களாலும் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். மேலும் கடிதங்கள் பரிமாறியும், செல்போன்களில் குறுந்தகவல்கள் மூலமாகவும் காதல் வசனங்களை பேசி கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.

இதற்கிடையே மஞ்சுநாத் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். கமலம்மா தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன்பேரில் இவர்களது திருமணம் நேற்று முன்தினம் இரியூரில் உள்ள ரெங்கநாதர் கோவிலில் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த திருமணத்தால் நெகிழ்ச்சி அடைந்த காதல் தம்பதியின் குடும்பத்தார், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com