

புதுச்சேரி,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் புதுச்சேரிக்கு வந்தார். அவரை சுத்துக்கேணி பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உலக வங்கியிடம் கடன்பெற்று நடைபெற உள்ள சாலைப்பணிகளுக்கான ரூ.1,300 கோடி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக தங்களுக்கு கிடைத்த தகவலை வெற்றிவேலும், தங்க தமிழ்ச்செல்வனும் பத்திரிகையாளர் களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இந்த டெண்டர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கூறியுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளனர்.
இதில் தவறு நடக்கவில்லை என்றால் முதல்-அமைச்சர் மறுத்திருக்கலாம் அல்லது மானநஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருக்கலாம். பொதுவாழ்வில் இருந்தால் குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்லாமல் வழக்குப்போடுவதால் இன்னும் பிரச்சினை பெரிதாகத்தான் ஆகும். இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக கவர்னரிடம் நான் முறையிடுவேன்.
காவல்துறை அதிகாரிகள் ஒருபோதும் தவறான செயலை செய்யக்கூடாது 6 தனிப்படை அமைத்து வெற்றிவேலை தேட அவர் என்ன தேச துரோக செயலை செய்துவிட்டார்?
நான் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதியே சுற்றுப்பயணம் செல்ல வேண்டியது. ஆனால் அதற்கு தடங்கல் செய்தார்கள். அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் வரத்தான் செய்யும். ஆனால் அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும்தான் கவனிக்கவேண்டும்.
பிரதமர் வருவதற்கு முன்பே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அதை கேட்கமாட்டார்கள். இருவரும் பதவி சுகம் அனுபவிக்கத்தான் நினைக்கிறார்கள். இது ஒரு கமிஷன் மண்டி அரசாங்கமாக உள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க விவகாரம், 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். தமிழகம்-புதுவையில் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். புதுவையில் கோகுலகிருஷ்ணன் எம்.பி.யோ, எம்.எல்.ஏ.க்களோ எங்களிடம் இல்லை.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.