தேவகோட்டையில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் அமைய முயற்சி மேற்கொள்வேன்; அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி தேர்தல் பிரசாரம்

காரைக்குடி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி சாக்கோட்டை ஒன்றியம் , காரைக்குடிநகர், தேவகோட்டைநகர், கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தேவகோட்டையில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் அமைய முயற்சி மேற்கொள்வேன்; அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி தேர்தல் பிரசாரம்
Published on

அவரை கட்சியினரும், பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்போகி வி.பாண்டி பேசியதாவது, தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். கல்வி, சுகாதாரம் வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். அரசு மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவதோடு பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை போன்றவற்றின் பயன்களும் மக்களுக்கு முழு அளவில் கிடைக்க முயற்சி மேற்கொள்வேன். பாரம்பரிய வீர விளையாட்டுக்களை பாதுகாப்பேன். தொகுதி முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்

தீர்வு காணப்படும். விவசாயம், தொழில் இரு துறைகளும் வளர்ச்சி பெற உறுதுணையாக இருப்பேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வேன். செட்டிநாட்டு தின்பண்டபொருட்கள் (ஸ்நாக்ஸ்) தயாரிப்பினை தொகுதியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெண்கள் கைத்தொழிலாக குடும்பத்தோடு செய்து வருகின்றனர். இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் வெளியூர் வியாபாரிகளே லாபமடைகின்றனர். இத்தொழிலுக்கு உரிய அங்கீகாரம் பெறப்பட்டு தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் பெண்களே நேரடியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட வழிவகைகள் செய்யப்பட்டு லாபம் பெற வழி செய்யப்படும்.

தேவகோட்டையில் அரசு கலைக்கல்லூரி அரசு பாலிடெக்னிக்கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொள்வேன். தொகுதியில் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்களை காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்வேன். சங்கராபுரம் ஊராட்சியினை பேரூராட்சியாகவும் காரைக்குடி நகராட்சியினை, மாநகராட்சியாகவும் தரம் உயர்த்திட சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். காரைக் குடி பகுதியில் வழக்குகள் அதிகம் இருப்பதால் காரைக்குடியிலும் சப் கோர்ட் அமைக்க கவனம் செலுத்துவேன். தொகுதி மக்கள் அமைதியாக வாழவும் தொகுதி வளமும் வளர்ச்சியும் பெறவும் பெற வேண்டும் என்பதையே முதல் நோக்கமாக கொண்டு செயல்படுவேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com