

கல்லக்குடி,
லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் நேற்று முன்தினம் கல்லக்குடி பேரூராட்சியில் கடைவீதி, ராஜாடாக்கீஸ்தெரு, நாச்சிமுத்துகாலனி, டால்மியா குடியிருப்பு காலனி, புதிய மற்றும் பழைய சமத்துவபுரங்கள், திருவள்ளுவர் நகர் நேற்று புள்ளம்பாடி பேரூராட்சியில் அலப்பெரட்டியார் தெரு, கடைவீதி, தேரோடும்வீதி, ராஜீவ்நகர், அண்ணாநகர், தைலாகுளம், உதயநகர், சவேரியார்கோவில்தெரு மற்றும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:-
புள்ளம்பாடியில் புதிய அரசு கலைக்கல்லூரி, புள்ளம்பாடி திருமழப்பாடி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை அரசே கொள்முதல் நிலையம் அமைத்து பெற்றுக் கொள்ளவும், பெருவளப்பூர் பகுதியில் ஆண்களுக்கான பாலிடெக்னிக் கல்லூரி, பெருவளப்பூர் அரசு ஆரம்ப சுகாதாரமையம் 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும், ஊட்டத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். பெண்கள் வீட்டின் கண்கள் போன்றவர்கள்.
எனவே பெண்கள் கல்வியறிவு பெற்றால் அவர்களது குடும்பம் சமுதாயத்தில் மேன்மை பெறும். அவ்வாறு சமுதாயத்தில் மேன்மைபெரும்போது இந்த நாடு உயரும் எனவும் பெண்கள் விழிப்புணர்வு பெற கல்வியறிவு வழங்கிய தி.மு.க. இயக்கத்திற்கு உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், நகர செயலாளர் முத்துகுமார், நகர இளைஞரணி தியாகு, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அர்ச்சுனன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரையரசன், கம்யூனிஸ்டு கட்சி ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலைஇன்பன், முன்னாள், இன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.