“நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்

நாகர்கோவிலில் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் நடந்த திருமணம் தோல்வியில் முடிவடைந்ததால், விஷம் குடித்தபடி முகநூலில் உருக்கமான வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
“நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் இடலாக்குடி வட்டவிளையை சேர்ந்தவர் சஜின் (வயது 25), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர். இதற்கிடையே சஜினும், அந்த மாணவியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணம் செய்த பிறகு இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். தனக்கு திருமணம் ஆன விஷயத்தை வீட்டில் கூறினால் பெற்றோர் என்ன செய்வார்களோ? என்று பயந்து போன மாணவி வீட்டில் கூறாமல் மறைத்துள்ளார். எப்போதும் போலவே அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். வீட்டிலும் அனைவரிடமும் சகஜமாக பழகினார். இதனால் பெற்றோருக்கு எந்த விதமான சந்தேகமும் ஏற்படவில்லை. மேலும் அவ்வப்போது சஜினை சந்தித்து பேசி வந்துள்ளார். அலைபாயுதே பட பாணியில் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சஜின் சம்பவத்தன்று மாணவியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். அந்த குறுந்தகவலில், அன்பு மனைவிக்கு திருமண வாழ்த்துகள் என்று இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக, இதை மாணவியின் பெற்றோர் பார்த்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது சஜின், தன்னை திருமணம் செய்துகொண்ட விஷயத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவியை அவருடைய பெற்றோர் வெளியே அனுப்பவில்லை. மாணவியை சந்திக்க முடியாததால், சஜின் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், என் மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டில் சிறை வைத்துள்ளனர். எனவே அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜராகி மாணவி கூறியபோது, சஜின் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே நான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனால் மாணவியை அவருடைய பெற்றோருடன் செல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.

எனினும் மாணவி பிரிந்து சென்றதை சஜினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று மாணவியை தன்னுடன் அனுப்பும்படி தொந்தரவு செய்துள்ளார். மேலும் சஜினின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் சென்று பேசியுள்ளனர். ஆனாலும் சஜினுடன் செல்ல மாணவி மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சஜின் மற்றும் அவருடைய உறவினர்கள் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் சஜின், அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் மனவேதனை அடைந்த சஜின் திடீரென விஷம் குடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்ததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.

ஆனால் அவர் விஷம் குடிப்பதற்கு முன்னதாக முகநூலில் (பேஸ்புக்) ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஜின் மிகவும் உருக்கமாக பேசி உள்ளார். அதாவது, நான் மாணவியை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்தேன். அவரது வீட்டார் எங்களை விட வசதியானவர்கள். இதனால் என் காதலை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை. தற்போது அவரது பெற்றோரின் தூண்டுதலின் பேரில் என் மீது மாணவி புகார் அளித்துள்ளார். இதனால் என் தாயை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். என் தாயா? அல்லது என் காதலா? என்று பார்த்தால் என் தாய் தான் எனக்கு முக்கியம். நான் இறந்து விட்டால் என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும் என்று அந்த வீடியோ பதிவில் சஜின் கூறியுள்ளார். உருக்கமாக பேசி முடித்ததும் அவர் விஷம் குடிக்கிறார், அந்த காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அலைபாயுதே சினிமா பாணியில் நடந்த திருமணம் தோல்வியில் முடிவடைந்ததால் விரக்தி அடைந்த வாலிபர், விஷம் குடித்தபடி முகநூலில் உருக்கமான வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com