உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி உதவியை பெற முடியும் என்று கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து
Published on

புதுச்சேரி,

மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்கோ அல்லது கவர்னருக்கோ அதிகாரமில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் நிர்வாகியான கவர்னருக்கு சட்டப்படி உள்ள அதிகாரத்தையும் பொறுப்பு விவரத்தையும் முதல்-அமைச்சர் பார்க்கவேண்டும். மத்திய உள்துறையானது மாநில தேர்தல் ஆணையரை வெளிப்படையான போட்டியின் அடிப்படையிலும், நியாயமான செயல்முறையிலும் தேர்வு செய்ய அறிவுறுத்தி உள்ளது. ஆனால் நியமிக்க கூறவில்லை.

அதன்படி தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து தேர்தல் ஆணையரை தேர்வு செய்யவும், தேர்வுக்குழுவின் அமைப்பு மற்றும் விதிமுறைகளை கவானர் இறுதி செய்யவும் தெரிவித்துள்ளது. சட்ட வழிமுறைப்படி தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல்-அமைச்சர் கருத்து முற்றிலும் தவறானது.

மக்களுக்கு சரியான சட்ட மற்றும் நிர்வாக உண்மைகளை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. புதுவையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது தேர்தல் நடத்த வலியுறுத்துகிறார்கள். உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி அறிவிக்குமாறு அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. வார்டு வரையறை முடிந்ததும் தேர்தலை தாமதமின்றி அறிவிக்க வேண்டும்.

சட்டப்படியும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படியும் மத்திய அரசு மற்றும் கவர்னர் அலுவலகம் செயல்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அதற்கான நிதி உதவியை மக்கள் இழந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலுக்கு பிறகு உருவானவுடன் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி மற்றும் மானியங்களை பெற முடியும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com